Friday 3 April 2015

உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 3 . சிரிக், சர்ப்பயோகம். 03-04-2015


உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 3 .


4. சிரிக் அல்லது மாலா யொகம் ;

நற்கோள்கள் கேந்திர பாவங்களில் இருந்தால்  சிரிக் யோகம் என்று கூறப்பட்டுள்ளது.

கேந்திரம் என்பது இலக்னம் , நான்கு , ஏழு , பத்து ஆகிய நான்கு பாவங்களாகும். இப் பாவங்களில் வளர்பிறை சந்திரன், புதன் , குரு, சுக்கிரன் ஆகிய நான்கு கோள்கள் மட்டும் இருக்க வேண்டும். மற்ற எந்த கோள்களின் இணைவும் இருக்கக்கூடாது.

குருவும் ,சந்திரனும் மாதத்தின் ஒன்பது நாட்கள் தங்களுக்குள் கேந்திரத்தில் இருக்கும். சுக்கிரனும், புதனும் தங்களுக்குள் கேந்திரத்தில் இருப்பது என்பது நிச்சயமாக நமது நாட்டில் ஏற்படாது…ஏனெனில் சுக்கிரன் சூரியனிலிருந்து 47 பாகை விலகியிருக்கும் .அதேபோல் புதன் 29 பாகையளவில் விலகியிருக்கும். இந்த இரு கோள்களின் தூரத்தையும் கூட்டினால் இடைப்பட்ட தூரம் 76 பாகையாகும். இந்த அளவு மூன்று இராசிகளுக்குள் மட்டும் வருகிறது. எனவே சுக்கிரனும் , புதனும் தங்களுக்குள் ஒவ்வொரு கேந்திரத்தில் இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.

அதனால் சுக்கிரனும்.புதனும் ஒரே கேந்திர பாவத்தில் இருக்க முடியும். எனவே ஏதேனும் மூன்று கேந்திர பாவகத்திலோ அல்லது இரண்டு கேந்திர பாவகத்திலோ, அல்லது ஒரு கேந்திர பாவகத்திலோ இந்த கோள்கள் அமைப்பு ஏற்படும்.

சிரிக் யோகப் பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் உலக இன்பங்களை அனுபவிப்பதும், மகிழ்ச்சியாகவும், அனைவரும் விரும்பும்படி வாழ்வார்.

சிறப்புப் பலன்களை காண்போம் :

இந்த யோகத்தில் இலக்ன பாவகம் தொடர்பில்லாமல் போனால் சாதகரது பெயர் அதிகமாக வெளிப்படாது. மற்றவர் தயவை நாட வேண்டியிருக்கும்.

நான்காம் பாவக தொடர்பு இல்லை என்றால் சாதகரது உறவினர்கள் உதவியை எதிர்பார்க்க முடியாது. அனுபவிக்கும் சுகங்களும் வரையறுக்கப் பட்டதாக அமையும்
.
ஏழாம் பாவக தொடர்பு இல்லை என்றால் சாதகருக்கு எதிர்பாராத மனிதர்களின் உதவிகள் ஏற்படாது. எதிர் பாலினரின் உதவியும் எற்படாது.

பத்தாம் பாவக தொடர்பு இல்லை என்றால், தனது தொழில்முறை அமைப்பு ரீதியாக பெயர் ஏற்படாது. பெரிய மனிதர்களின் உதவியும் தடைபடும்.

( இந்த நிலைகளில் நற்கோள்கள் இருப்பதும் கடினமாகும். ஏனெனில் தீய கோளான சூரியனை விட்டு புதனும், சுக்கிரனும் இணைந்திருக்க வேண்டும். அதன் பின்பு அந்த இணைவு குருவிற்கு கேந்திரமாக அமைய வேண்டும்…).

5.சர்ப்பயோகம். ;

தீய கோள்கள் கேந்திரத்தில் இருந்தால் சர்ப்பயோகமாகும்.

தீய கோள்கள் என்பது சூரியன், செவ்வாய், சனி, ஆகிய மூன்று கோள்களைக்குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. தற்பொழுது நிழல் கோள்களான இராகு, கேதுவையும் சோதிடத்தில் இணைத்துள்ளதால் அவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்…. அதனடிப்படையில் உரேனஸ், நெப்ட்யூன் கோள்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்… இவை அனைத்துமே தீய கோள்களாகும்..

இக்கோள்கள் அனைத்தும் கேந்திரங்களில் இருப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். முதலில் சூரியன், செவ்வாய்,சனி கோள்கள் தங்களுக்குள் கேந்திரத்தில் இருப்பதற்கு ஒரு ஆண்டுக்குள் வருவதற்கு வாய்ப்புண்டு.

சர்ப்பயோகப் பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் எப்பொழுதும் துன்பத்துடனே வாழ்க்கையை நடத்துவார். மகிழ்ச்சியற்ற வாழ்வினால் திருப்தியற்ற நிலயில் காணப்படுவார்….

சிறப்புப் பொதுப்பலன்கள் ;

இலக்னத்தில் இக் கோள்கள் இல்லையானால் சாதகர் தன்னம்பிக்கையுடன் தனது செயல்களில் ஈடுபட்டு தனது துன்பங்களை வெற்றி கொள்வார்.

நான்காம் பாவத்தில் இக்கோள்கள் இல்லையானால் சாதகர் உறவினர் உதவியுடன் தனது துன்பத்திலிருந்து விடுபடுவார்.

ஏழாம் பாவத்தில் இக்கோள்கள் இல்லையானால் சாதகர் புதிய மனிதர்களின் உதவியும், எதிர் பாலினரின் உதவியும் பெற்று துன்பத்தைக் குறத்துக் கொள்வார்.

பத்தாம் பாவத்தில் இக்கோள்கள் இல்லையானால் சாதகர் பெரிய மனிதர்களின் உதவியும். தனது கௌரவத்தினாலும் துன்பத்தை எதிர் கொண்டு வெற்றியும் பெறுவார்….

இராகு-கேது.

இராகுவையும், கேதுவையும் இணைத்துப் பலன்கள் கூறப்பட்டால் கூடுதலான கெடுபலன்களை அனுபவிக்க நேரிடும். எப்படியெனில் 1,7,ஆம் பாவத்தில் இக்கோள்களின் செயல்கள் எப்படி இருக்கும் என்று அனைவரும் அறிந்ததே… (கடைசி வரை கணவன் –மனைவி உறவில் துன்பங்களை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்.) 4,7, ஆம் பாவத்தில் இருந்தால் சுகமும், தொழிலும் எப்படி வேண்டுமானாலும் துன்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இவை சோதிடர்கள் அனைவரும் அறிந்ததே….

இந்த யோகங்கள் கேந்த்திரத்தில் உள்ள கோள்களின் தன்மைக்கேற்ப பலன்களை பிரித்து கண்டு பிடித்துக் கூறவேண்டும்..அப்படி பார்த்தோமானால் அதிகமான கோள்கள் நிலைகளை ஏற்படுத்தி பலன்கள் எழுதலாம்… இருப்பினும் இப்பலன்களை எல்லாம் அவ்வப்பொழுதுள்ள கோள்களின் அடிப்படையில் யூகித்தறிந்து கூறப்பட வேண்டும்.


உரேனஸ், நெப்ட்யூன் கோள்களுக்குரிய பலன்களைப் படித்து அதற்கு தகுந்தாற்போல் பலன்களை அறிந்து கொள்க....


……. நன்றி-----நாளை சந்திப்போம்…


Professor Dr.T.Vimalan. Ph.D.    03- 04 -2015.