Tuesday 31 March 2015

உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்-பகுதி 1 //// 31-03-2015.


உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்-பகுதி 1

அன்புடையீர் வணக்கம்…மீண்டும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது மரியாதைக்குரிய மாணவர்களும், நண்பர்களும் கேட்டுக் கொண்டதற்கினங்க, சோதிடத்தின் ராஜயோகம் பற்றிய விளக்கங்களை தொடர் கட்டுரையாகவும் ,அவ்வப்பொழுது கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் அமைப்பிலும் எழுதுகிறேன்
  
நமது சோதிடவியல் சாத்திரத்தில் ராஜயோகம் என்று சொல்லக்கூடிய அரசயோகங்கள் பற்றி இந்த பகுதியில் புரிந்துகொள்வோம்..

ராஜ யோகம் அனைத்து சாதகங்களிலும் காணப்படுமா அல்லது ராஜயோகமே இல்லாத சாதகங்களும் உள்ளனவா என்ற வினாவை அனைவரும் கேட்கின்றனர்..
அதேபோல் ராஜயொகம் இருந்தால் அரசனைப் போல் வாழ்வு ஏற்படுமா என்றும் வினாவை கேட்கின்றனர்….இவ்விரண்டு வினாக்களுக்கும் விளக்கத்தை கொடுத்துவிட்டு பின்னர் ராஜயோகநிலைகளை விளக்குகிறேன்……

ராஜயோகம் ;

சோதிட சாத்திரத்தின் சிறப்பை உணர்ந்த நமது சோதிடப் பெரியோர்கள் கோள்களையும் அவை இருக்கும் பாவகத்தின் அடிப்படையும் கொண்டு ஆயிரக்கணக்கில் ராஜயோக நிலைகளைக்கூறி  ஒரு சிலவற்றுக்கு அதற்கான பலன்களையும் எழுதியுள்ளனர். உண்மையில் ராஜயோகங்கள் ஒருவரை அரசனாக்குகிறதா அல்லது அரசனுக்குரிய மரியாதையை ஏற்படுத்துகிறதா அல்லது செல்வநிலைகளை உயர்த்துகிறதா அல்லது எந்த ஒரு பலனும் தராமல் உள்ளதா என்று சிந்தித்துப் பார்த்தால் பல செய்திகள் தெரியவருகிறது.

மேற்கண்ட அனைத்து நிலைகளிலுமே மானுடர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது. எனவே ராஜயோகம் என்பது அவரவர் வாழும் சூழலுக்கும், அடிப்படை பொருளாதாரத்திற்கும்,ஏற்றாற்போல் அமைவதைக் காணமுடிகிறது..எனவே ராஜயோகம் என்பது ஒருவரது வாழ்வில் பொதுவான மதிப்பை ஏற்படுத்தும் அமைப்பு என்று முடிவிற்கு வரலாம்… அரசனும் ஆண்டியாவான் - ஆண்டியும் அரசனாவான். என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ராஜயோகக் கோள்கள் நிலை.

ராஜயோகக் கோள்கள் நிலைகளை பல சோதிட அறிஞர்கள் கூறியுள்ள நிலையில் சில சோதிட அறிஞர்களின் கருத்துக்களை இங்கு ஆய்வாக நாம் பார்ப்போம்.
முதலில் பிருகத் ஜாதகத்தில் கூறப்பட்ட நாபச யோகங்களை இங்கு விளக்குவோம்..

நாபச யோகங்கள் ;

இந்த நாபச யோகங்களை யவனர்களின் சோதிட நூலில் இருந்து எடுத்ததாக விளக்கியுள்ளார். யவனர்கள் 1800 நாபசயோகங்களைக் கூறியுள்ளதாகவும் அவற்றை சுருக்கி 32 விதமான நாபச யோகங்களின் பலன்களை இங்கு கூறுகிறார்..   இந்த நாபசயோகங்களை நான்கு உட்பிரிவாகப்பிரித்தும் உள்ளார். அவை ஆக்ருதியோகங்கள் இருபதும், சங்கியயோகங்கள் ஏழும், ஆஸ்ரேயயோகங்கள் மூன்றும், தளயோகங்கள் இரண்டும் ஆக மொத்தம் 32 யோகங்களாகும்…..

இந்த யோகங்களில் இராகு,கேதுவை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.. அப்படி இராகு,கேதுவை கணக்கில் கொண்டால் அவற்றை மற்ற கோளின் இணைவுடன் எடுத்துக் கொள்க…

1 ரஜ்ஜு யோகம்  

அனைத்து கோள்களும் சரராசியில் இருப்பது ரஜ்ஜுயோகமாகும்.
சர ராசி என்பது, மேசம், கடகம், துலாம், மகரமாகும். இந்த நான்கு இராசிகளிலோ அல்லது இதில் உள்ள ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றிலோ இருக்கலாம்..

இந்த யோகத்தில் பிறந்தவர் மற்றவருடைய சொத்தில் பற்றுடையவராக இருப்பார். ஆசையுடயவராவார்..பொறாமை குணத்துடன் இருப்பார். பயணத்தில் விருப்பமுடையவர். வெளியூர், வெளிநாட்டிற்கு செல்பவராவார்…இதுவே பிருகத் சாதகத்தில் உள்ள பொதுப் பலன்களாகும்…

கூடுதலான பொதுப்பலன்களையும் காண்போம்.

மேசராசியானல்; கோபமும், தான் என்ற அகங்காரமும், தலைமைப் பண்பும், முரட்டுக்குணமும், போராடுவதும், பகைமையைப் பற்றி கவலையில்லாமலும், மக்கள் மேல் பற்றும், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியும் உடையவராவார்.

கடக இராசியானால் அமைதியாக தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளுதலும், வேளாண்மை நிலங்களை அபகரித்தலும், சிற்றின்ப நாட்டங்களும், செயலில் வெட்கம் இல்லாமலும் அனைத்து சுகங்களை அனுபவித்தலும் ஆகும்.

துலாம் இராசியானால் தன்னுடைய தொழிலில் எதைச் செய்து முன்னேறுவதும், பெண்கள் விருப்பமுள்ளவரும், கருகியாகவும், பொது சொத்துக்களின் மேல் ஆர்வமும், அவமானமடைதலும் ஏற்படும்.


மகர ராசியானால் ; சுதந்திர எண்ணமும், மற்றவர் பொருளை சேர்ப்பதில் திறமையும், கருமியும், வெட்கமறியாமல் இருப்பதும், உச்ச பட்ச பொறாமைக் குணத்துடன் செயல் படுவதும் , தீராத ஆசையுடையவரும். வெட்கமறியாதவராகவும் இருப்பார். (நாளை சந்திப்போம்) 

         Professor  Dr.T.Vimalan Ph.D   31-03-2015.