Friday 5 December 2014

தமிழகப் பல்கலைக் கழகங்களில் சோதிடவியல் துறை. சிறு விளக்கம்.

அன்புடையீர் வணக்கம். திரும்பவும் உங்கள் அனைவரையும்  சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
 தமிழகப் பல்கலைக் கழக சோதிடவியல் துறை  வரலாறு என்பது கி.பி 2002 ல் இருந்து தொடங்குகிறது. கி.பி.2001ல் இந்திய வரலாற்றில் சோதிடத்திற்கு என்று பல்கலைக் கழக மானியக்குழு ஒரு சிறப்பான முடிவைஎடுத்தது. என்னவெனில் இந்தியப் பல்கலை கழகங்களில் சோதிடவியல்பாடமாக வைக்கப்பட்டு சோதிடவியல்துறை தொடங்க ஆணையிடப்பட்டது. பதினாறு பல்கலைக்கழகங்களுக்கு மானியமாக ரூபாய் 15,00,000 (பதினைந்து இலட்சம்) வழங்கப் பட்டது. ஒரு பேராசிரியர், ஒரு இணைப் பேராசிரியர், இரண்டு விரிவுரையாளர்கள், இரண்டு அலுவலக உதவியாளர்கள் நியமித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அவர்களுக்குரிய சம்பளம் பல்கலைக்கழக மானியக்குழுவே கொடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் தமிழகத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு மானியம் வழங்கியது என்பது எனக்குத்தெரிந்த தகவலாகும். ஒன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.மற்றொன்று தஞ்சை சாஸ்த்ராப் பல்கலைக் கழகமாகும். 
இவற்றில் தஞ்சை ஸாஸ்த்ராப் பல்கலைக் கழகமே சோதிடவியல் துறையைத் தொடங்கியது.

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தனக்கு சோதிடவியல் துறைத் தேவையில்லை என்று மானியக்குழு கொடுத்த பணத்தை திருப்பியனுப்பியதாக பின்னர் அறிந்து கொண்டேன்.

கி.பி 2002ல் தஞ்சை சாஸ்த்ராப் பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்புமிகு. ரா. சேதுராமன் அவர்களின் ஆணைப்படி சோதிடவியல் துறைக்கு திரு தி. விமலனாகிய எனக்கு விரிவுரையாளர் பதவி கொடுத்து பாடப்பிரிவுகளைத் தொடங்கச் செய்தார். அந்த நாள் தமிழக சோதிடவியல்துறை வரலாற்றிலும் எனது வாழ்விலும் அழியாத புகழை ஏற்படுத்தியதாகும். சோதிடவியல் துறையின் முதன் முதலில் ஊழியம் பெற்றவனாக பாக்கியம் பெற்றேன். அங்குதான் உலகத்திலேயே மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை சோதிடவியல் பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. அதை நடத்துவதற்கு வாய்ப்பளித்த ஸாஸ்த்ராப் பல்கலைக்கழகத்தினர்க்கு என்றென்றும் நன்றியுடையவனாவேன்.

இதே 2002ல் ஆந்திரா பொட்டி ஸிரி ராமுழு பல்கலைக் கழகத்தில் முதுகலை சோதிடவியல் பாடப்பிரிவு தொடங்கப்பட்டது.

2007ல் தஞ்சை சாஸ்த்ராப்பல்கலையில் முதுகலை சோதிடவியல் பாடப்பிரிவும் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

பின்னர் 2009ல் கோவை கற்பகம் பல்கலைக் கழகத்திற்கு சோதிடவியல் துறையை ஏற்படுத்தி முதன் முதலில் அறிவியல் ரீதியான பட்டப்படிப்புகளை தொடங்கினேன். கற்பகம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் மாண்புமிகு டாக்டர். வசந்த குமார் ஐய்யாவின் உத்தரவின் பெயரில் எனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. Diploma, B.A., B.Sc., M.A., M.Sc. ,M.Phil., Ph.D. போன்ற அனைத்து பாடப்பிரிவுகளிலும் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இச்சோதிடவியல் துறைக்கு பேராசிரியராகவும், இயக்குனராகவும், தலைவராகவும் செயலாற்ற வாய்ப்பளித்த கற்பகம் பல்கலைக் கழகத்தினர்க்கு நன்றி உடையவனாகிறேன்.

ஏறத்தாழ 5000 நபர்கள் இதுவரை பட்டம் பெற்றிருப்பார்கள். இவை தவிர மற்ற பல்கலையில் எவ்வாறு சோதிடவியல்துறை இயங்குகிறது என்று எனக்கு தெரியவில்லை. இதுவே சோதிடவியல் துறையின் சுருக்கமான வரலாறாகும்.


( ஒரு சிலர் மதுரை காமராசர் பல்கலையில் சோதிடவியல் துறை இருந்ததாக கூறுவதாக கேள்விப்பட்டேன். அப்படியெல்லாம் ஒரு அதிர்ஸ்டம் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. அங்கு சோதிடவியல் துறையும் இல்லை.  சோதிடவியல் பேராசிரியர் என்று எவரும் இருந்ததில்லை. அங்கு இருந்தது சாதாரண டிப்ளமோ பாடப்பிரிவு ஆகும். அதுவும் தொலை நிலைக்கல்வியில் ஓராண்டு படிப்பாகும்.  தமிழகத்தில் உள்ள 20 நபர்கள் இப்பாடப்பிரிவை நடத்தியுள்ளனர். அதில் நானும் ஒருவனாவேன். எங்கள் அனைவருக்கும் பத்துமணி நேர வகுப்பிற்குரிய பணம் மட்டுமே கொடுக்கப்பட்டது. வேறு எங்களுக்கும் பல்கலைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எங்களைப்போலவே பல்கலையில் வெவ்வேறு துறையில் பணி செய்த ஊழியர்களும் பாடம் எடுத்துள்ளனர். நான் 1993/1994ல் டிப்ளோமோ படிப்பிற்கு தேர்வு எழுதத்தான் சென்றேன். ஏனெனில் மூன்று பாடங்களும் அடிப்படை சார்ந்ததாகும். வேறு எவரையும் அப்பொழுது தெரியாது. பின்னர் 1996ல் இப்பாடப்பிரிவை சோதிடம் தெரிந்தவர்கள் பாடம் எடுக்கலாம் என்று அறிந்து வாய்ப்பு கேட்பதற்கு சென்றேன்.
 அப்பொழுது அங்கு பல்கலை அலுவலராகப் பணியாற்றிய திரு. மாரிமுத்து( Non-Teaching staff) என்பவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் கேட்டபொழுது வடமொழித்துறை பேராசிரியர் டாக்டர், வீர ராகவன் அவர்களை பார்க்கச்சொன்னார். திருவீரராகவன் அவர்களைப் பார்த்தபின்னரே பல செய்திகள் அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. 
முதலில் சோதிடவியல் துறை என்று ஒன்று இல்லை என்பது புரிந்தது. பின்னர் பாடம் எடுக்க அனுமதிக்கப்பட்டேன். இதை பெருமையாகக் கூற முடியவில்லை. ஏனெனில் வெறும் டிப்ளோமோ பாடத்திட்டத்தை எந்த பிரிவிலும் தொடங்கலாம் என்றும் அதற்கு துறை என்று ஒன்று தேவையில்லை என்பதும் அறிந்து கொண்டேன். இப்பாடத்தைப் படிப்பதால் எதிர்காலத்தில் என்ன பயன் ஏற்படப்போகிறது என்ற ஐயமும் இருந்தது. சோதிடவியல் படிப்பதற்கு மாணவர்கள் அதிகம் வந்தாலும், எங்களை, மற்ற துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் கண்டு கொள்வதேயில்லை. அவர்கள் கொடுக்கும் பணம் பற்றாக்குறை தான் இருப்பினும் பாடம் எடுத்தோம் . 
மொத்தம் ஐந்து ஊர்கள், ஒரு ஊருக்கு மூன்று சனி,ஞாயிறு. ஆக ஒரு ஆண்டிற்கு  ஐந்து ஊர்களில் 30 நாட்கள் மட்டும் வகுப்புகள் எடுப்போம். மற்ற நாட்களில் எங்களது வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். மற்ற செய்திகள் பதிய முடியவில்லை. நன்றி.) நிறையக் கூறலாம். தேவையில்லை என்று முடிக்கிறேன்.

குறிப்பு: எனது மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! என்னை விமர்சனம் செய்ய வேண்டாம். உங்களைப் பற்றியும் உங்கள் திறமைகளைப்பற்றியும் மற்றவர்களைவிட எனக்கு நன்கு தெரியும். உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள். எனது பணியை நான் செய்கிறேன். நான் உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஒரு சிறு பகுதியை பொது மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் சோதிடம் என்ற கடல் குப்பைகளால் சூழப்பட்டு மக்களை ஏமாற்றும் கலையாகமாறி வருகிறது. அதில் கொஞ்சமேனும் வெளியேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் என்னால் முடிந்த அளவிற்கு சாதித்துள்ளேன். இனியும் சாதிப்பேன். உங்களால் முடிந்ததை சாதித்துக்கொள்ளுங்கள். ஒரு மாணவரிடம் எதுசரி,எதுதவறு என்று கேட்கும் நிலையில் நான் இல்லை. எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளாமல் ஏதாவது உருப்படியாகச் செய்யப்பாருங்கள். நன்றி.               
 Professor.Vimalan.